கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட மேலக்காவேரி பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு, பொது மக்கள் அச்சம், வீட்டிலிருந்து வெளியே வந்த சிறுவனை 3 நாய்கள் விரட்டி துரத்தும் காட்சி பதிவு மற்றும் ஆள் உயர சுவர் ஏறி குதித்து வீட்டில் வளர்க்கும் கோழிகளை லாகவமாக பிடித்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி காண்போரை பதற வைக்கிறது.
கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில், தெருக்கள் தோறும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே ஒவ்வொரு நாளும் சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது, அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் தனித்து செல்லும் நபர்களை குறி வைத்தே அந்த நாய் கூட்டங்கள் துரத்துவதும் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் ஆடுகளை கடித்து குதறுவதும் கழுத்தை பிடித்து கவ்விச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, இதுவரையிலும் கோரிக்கையாகவே நீடிக்கிறது
இந்நிலையில் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வீட்டிலிருந்து தனியாக வெளியே வந்த சிறுவனை 3 நாய்கள் கொண்ட கூட்டம் ஆக்ரோஷமாக அவனை துரத்தி செல்லும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் காண்போரை அச்சம் கொள்ள செய்கிறது, அக்கம் பக்கத்தினர் நாய்களின் குறைக்கும் சத்தம் கேட்டும், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டும் வெளியே ஓடி வந்து நாய்களை துரத்தியடித்து சிறுவனை நாய்களிடமிருந்து காப்பாற்றி மீட்டுள்ளனர் இதேபோல் அதே பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை விரட்டி விரட்டி கடித்து கழுத்தை பிடித்துக் வாயில் கவ்விக் கொண்டு ஆள் உயர சுவர் ஏறி குதித்து தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது
தஞ்சை மாவட்ட நிர்வாகமும், கும்பகோணம் மாநகராட்சியும் இணைந்து விரைவில் இத்தகைய சம்பவங்கள் இனி தொடராமல், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில். நிரந்தரமான நல்ல தீர்வினை இது காணத்தக்க வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஒருமித்த குரலாகவும், கோரிக்கையாகவும் உள்ளது